கண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா? – Health Tips In Tamil

கண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா?

இந்த செய்தியைப் பகிர்க

பவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பிறந்த குழந்தைகளின் இளம் சருமத்திற்கு ஏற்றது என்று பல்வேறு விதமான பவுடர்களும், கிரீம்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உள்ளபடியே அவை குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தொடர்பான கேள்விகளும்.. நிபுணர்களின் பதில்களும்..!

பிரபலமான நிறுவனத்தின் ‘பேபி சோப்’ பயன்படுத்தியும், குழந்தையின் சருமம் வறண்டு போகிறதே ஏன்?

பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது. அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.

பிறந்த குழந்தையை தினமும் சுடுநீரில் குளிப்பாட்டலாமா?

குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாகக்கொண்ட குழந்தைகளை இரண்டு, இரண்டரை கிலோ எடை வரும் வரை பெரும்பாலும் குளிப்பாட்டுவதில்லை. உடல்சூட்டை பராமரிக்க அவ்வாறு செய்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குளிப்பாட்டும்போது சளித்தொந்தரவும், காய்ச்சலும் ஏற்படலாம். அதிக சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. இளம் சுடுநீரில்தான் குளிப்பாட்டவேண்டும். பால்குடிக்கும் குழந்தைகளின் கழுத்து இடுக்கில் பால் வடிந்து அழுக்கு படிந்திருக்கும். அதனால் அடிக்கடி கழுத்துப் பகுதியை துடைத்து சுத்தம்செய்யவேண்டும்.

குழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?

ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.

நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

எப்போதிருந்து குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பூசலாம்?

இரண்டு வயது வரை அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் சருமத்தை ஜொலிக்கவைக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதற்கான கிரீம்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது அவர்கள் பாரம்பரியம், கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவு போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டது. சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ போன்றவை உதவும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது விஞ்ஞானரீதியாக நிரூபணமாகவில்லை. அதுபோல் கடலை மாவு, சிறுபயறு மாவு போன்றவைகளை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லதல்ல. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு அவை ஏற்றதல்ல.

குழந்தைகளின் பிஞ்சு முடிகளுக்கு ஷாம்பு தேவையா?

குழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

குழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.

குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக ‘டயாபர்’ பயன்படுத்தலாமா?

அதிக நேரம் டயாபர் பயன்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும். திட்டுகளும், பருக்களும் தோன்றும். அதற்கான கிரீமை பயன்படுத்தி குணப்படுத்தவேண்டும். உள்ளே காட்டன் துணி வைக்கப்பட்டிருக்கும் டயாபர் கடைகளில் கிடைக்கும். தேவைப்படும்போது மட்டும் அதனை பயன்படுத்துங்கள். அதிக தூர பயணம் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட நேரத்தில் பழையதை மாற்றிவிட்டு புதியதை இணைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்து குழந்தை மலஜலம் கழித்திருந்தால் உடனே டயாபரை அப்புறப்படுத்திவிடுவது அவசியம். பின்பு தண்ணீரால் மென்மையாக தேய்த்துக்கழுவி, ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு துடைத்துவிட்டு புதிய டயாபரை இணைக்கவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie