தூக்கத்தில் குறட்டை… அலட்சியம் வேண்டாம் – Health Tips In Tamil

தூக்கத்தில் குறட்டை… அலட்சியம் வேண்டாம்

இந்த செய்தியைப் பகிர்க

நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குறட்டை, பொதுவாக இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேலிக்காக பயன்படுத்தி வருகிறோம். குறட்டையால் கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து வரை சென்றதாக நகைச்சுவையாக கூறுவது உண்டு. இந்த குறட்டையால் பாதிக்கப்படுவது பக்கத்தில் தூங்குபவர்கள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவரும்தான். இது பற்றி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோவன் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மருத்துவ மைய டாக்டர் பால.கலைக்கோவன் கூறியதாவது:-

குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பது உண்டு. அது ஒரு ஆபத்தில்லா பிரச்சினை என்றும் நம்புவதுண்டு. ஆனால் நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA

( OSA ) குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்

OSA ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

OSA ஏன் ஏற்படுகிறது ?

நாம் சுவாசிக்கும் காற்று, நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில், இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது. ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து, மூச்சு உள்ளே செல்வது தடைபடும். இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“

தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் REM SLEEP ) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு. அது அளவுக்கு மீறி தடைப்பட்டால், காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது, முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.

OSA வின் அறிகுறிகள் என்ன ?

(1) தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை

(2) தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்

(3) தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது

(4) பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்

(5) காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது

(6) அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை ஏற்படுவது

(7) தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை

(8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது

(9) அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது

(10) காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல். இந்த அறிகுறிகளுள் 3-க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .

சர்க்கரை நோய் ( Diabetes ) , ரத்த அழுத்தம் ( High Blood pressure ) , இருதய நோய் ( HEART ATTACK ) , பக்கவாதம் ( STROKE ) , குழந்தையின்மை ( Infertility ) , ஞாபக மறதி ( Memory loss ) ,திடீர் மரணம் ( Sudden Death ) உள்ளிட்டவைகள் OSA வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும்.

மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்கநேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Julie